உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இலவச மின் இணைப்பில் முறைகேடு விவசாயிகள் புகார்

Published On 2022-03-12 07:21 GMT   |   Update On 2022-03-12 07:21 GMT
விவசாய நிலங்களில் வாடகைக்கு வீடு கட்டிவிடுவதால் சுற்றுச்சூழல் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. கிராமப்புறங்கள் புறநகர் பகுதியாக வளர்ந்து வருகின்றன.கிராமங்களில் பலர் வீடுகளை கட்டி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

வாடகை வீடுகளுக்கான குடிநீர் சில இடங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. இலவச மின்சாரம் வாடகை வீடுகளுக்கு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், மின்வாரியத்துக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது.

மேலும், விவசாய நிலங்களில் வீடு கட்டிவிடும்போது பெருமளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கழிவுநீர் அளவுக்கதிகமாக நிலத்திற்குள் பாய்வதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு, பருகுவதற்கு தகுதியற்றதாக மாறும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது:

விவசாய நிலங்களில் வாடகைக்கு வீடு கட்டிவிடுவதால் சுற்றுச்சூழல் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்ட கழிவுகளை விவசாய பூமி மற்றும் பொது இடங்களில் வீசி எறிகின்றனர். இது விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு பேராபத்தாக முடியும். இதனால் விவசாயிகள் பல நேரங்களில் நஷ்டம் அடைகின்றனர்.

விவசாயிகளின் நஷ்டத்தை தவிர்க்க அரசு இலவச மின்சாரம் வழங்குகிறது. மானியத்தில் வழங்கப்படும் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தவறானது. விவசாய நிலங்களில் வாடகை வீடுகள் இருந்தால் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தி பணம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News