search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் இணைப்பு"

    • சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளது தெரியவருகிறது
    • உடனடியாக மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி மடவா மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி ராஜ்குமார்.

    இன்று காலை சீர்காழி பகுதியில் மழை பெய்தது. அப்போது இவரது வீட்டை மின்னல் தாக்கியது.

    அதில் வீட்டில் உள்ள அனைத்து மின்சார பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

    மேலும் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் இருந்து குழந்தைகளை மீட்டுக்கொண்டு அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார்.

    இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அடிப்படையில் தாசில்தார் இளங்கோவன் நேரடியாக களத்தில் ஆய்வு செய்தார்.

    மேலும் மின்னல் தாக்கிய வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது .

    ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் பாபு, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் பாரிவள்ளல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து தாசில்தார் தெரிவிக்கையில் சேத விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, இழப்பீடு பெற்று தர மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

    மேலும் வட்டாட்சியர் இளங்கோவனால் தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடம் உடனடியாக மின் இணைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.

    • லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
    • யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை தாங்கினார். செயற் பொறியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மின்நுகர்வோர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். குறிப்பாக மின்வாரியம் லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டிடம் கட்டும் போது தற்காலிக மின் இணைப்பு வழங்குகிறது. ஒருமுனை இணைப்புக்கு 2,200 ரூபாய் டெபாசிட், மும்முனை இணைப்புக்கு 4,400 ரூபாய் டெபாசிட் செலுத்தி இணைப்பு பெற வேண்டும். யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் மாதம் 1,200 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.

    தற்காலிக மின் இணைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கூடுதல் டெபாசிட் தொகை வழங்கப்படும். கடந்த சில நாட்களாக மாதா மாதம், கூடுதல் டெபாசிட் என்ற பெயரில், அதிக தொகை வசூலிப்பதாக மின்நுகர்வோர் அமைப்புகள் புகார் அளித்தன. மின்சார வாரியம் பல்வேறு வகையில் கட்டண உயர்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்காலிக இணைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவது குறித்து முறையிடப்பட்டது. 

    • பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார்.
    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள புங்கம்பள்ளி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (32). விவசாயி.

    இவர் தனது தாத்தா ரங்கப்பகவுண்டருடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாக கலைவாணன் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கிடைக்காததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்தததையடுத்து, உயர் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார்
    • இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பூண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் உதயகுமார்(வயது20). இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார். அப்போது பக்கத்து வீட்டு சிறுமி வீடு இருட்டாக இருக்கிறது என்று நினைத்து ஸ்விட்ச் போட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே செட்டியர்பட்டியில் ரூ.8.70 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
    • 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எனது முயற்சியால் அசையா மணி விலக்கு மேற்குப்பகுதி யில் புதியதாக போர்வெல் அமைக்கப்பட்டதையும் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சாஸ்தா கோவில் அணை பகுதிக்கு வந்து கொண்டி ருக்கும் குறைந்த அளவு நீர்வரத்தை முறையாக செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேறுவராயன் கண்மாய்க்கு கொண்டு செல்லும் பணிகளை முடுக்கி விட்டுள்ளேன்.

    நீர் செல்லும் வழிப் பாதையை சீரமைக்கப்பட்டு வருவதை அணையின் உள் பகுதிக்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கி உள்ளேன்.ஒரு வாரத்திற்குள் கண்மாய் நிரம்பியவுடன் தற்போது 2 வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் குடிநீரை 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

    சேத்தூர் மற்றும் செட்டி யார்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    செட்டியார்பட்டி பேரூ ராட்சியில் 2006-ம் ஆண்டு நான் துணை சேர்மனாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி யால் செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 2000 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 3 மடங்காக குடிநீர் இணைப்பு உயர்ந்து 7000 குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் தான் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

    இதனையும் சரி செய்யும் விதமாக செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு முறையாக குடிநீர் வழங்க 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இப்பணியை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல் பாட்டிற்கு வரும்போது செட்டியார்பட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர்.
    • ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பாலத்தொழு குளம் மாசடைவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் பெறப்பட்டதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் 3 அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு மூலம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த 3 சாய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டு அந்த 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    இதேபோல் சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலை கழிவு நீரை தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் இயக்கி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.

    அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு இழைக்கும் தொழிற்சாலை மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.33 ஆயிரத்து 765 விவசாயிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
    • மின் கம்பம் மற்றும் கம்பியை மட்டும் அவரது நிலத்தில் பொருத்தி விட்டு சென்றுவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா கோட்டையணஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமான்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியண்ணன். விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு புதிதாக மின் இணைப்பு வேண்டி பெரும்பாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள வணிக ஆய்வாளரை அணுகினார்.

    அவர் புதிய மின் இணைப்பு பெற ரூ.40 ஆயிரம் செலவாகும் என தெரிவித்து ரூ.33 ஆயிரத்து 765 விவசாயிடமிருந்து பெற்றுக் கொண்டு மின் கம்பம் மற்றும் கம்பியை மட்டும் அவரது நிலத்தில் பொருத்தி விட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    இது குறித்து விவசாயி அதிகாரியிடம் பலமுறை சென்று கேட்டும் மின் இணைப்பு வழங்காமல் விவசாயி மாரியண்ணனை அலைகழித்து வந்துள்ளார். மாரியண்ணன் கடந்த 2014-ம் ஆண்டு தனக்கு புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தும், கடந்த 9 வருடங்களாக அவரால் மின் இணைப்பு பெற முடியாமல் இருப்பதால் அவதியடைந்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு புதிய மின் இணைப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார். 

    மேலும் அதில் தன்னை அலைக்கழித்து வந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு விரைவாக புதிய மின் இணைப்பு வழங்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
    • தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

     திருப்பூர்:

    திருமூா்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு வருகிற 20-ந் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ளது. தொகுப்பு அணைகளில் நீா் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று உயிா் நீா் மட்டுமே திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

    இது குறித்து பல்லடம் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் எஸ்.ஆனந்த் பாலதண்டபாணி கூறியதாவது:-

    பல்லடம் பகுதியில் 48 கிலோ மீட்டா் தொலைவுக்கு பிஏபி., பாசன வாய்க்கால் உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கடை மடை வரை தடையின்றி செல்வதற்காக வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீா் கடை மடை பகுதிகளான வெள்ளக்கோவில், குண்டடம் வரை முறையாக செல்வதையும், தண்ணீா் திருட்டையும் அந்தந்தப் பகுதி பாசன சபைத் தலைவா்கள் கண்காணிக்க வேண்டும். வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரைத் திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். மேலும் தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்ணீா் திருட்டை கண்காணிக்கும் வகையில் காவல் துறை, வருவாய் துறை, நீா்வளத் துறை மற்றும் மின்சாரத் துறை அலுவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றாா். 

    • மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தின் ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த உமா என்கிற மின் ஊழியரை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறியதால் மின் ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்துள்ளார்.

    இதனால், மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதித்த ஆத்திரத்தில் நேராக அருகில் இருந்த காவல் உதவி மையத்தின் மின்கம்பத்தில் ஏறிய மின் ஊழியர் உமா மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியரின் இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதைதொடரந்து, போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரத்துறை அதிகாரிகள் உத்தரவு
    • கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதால் நடவடிக்கை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் நேரடியாக அருகில் இருந்த நிலத்தில் விடுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து கழிவு நீரை நிலத்தில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அதிரடி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்
    • மின்வாரிய அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக முதல் அமைச்சரின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

    விரைவு (தட்கல்)முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே, வேலூர் மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய கோட்டங்களில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளில் விருப்பம் உள்ளவர்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறலாம்.

    இதற்காக தங்கள் பகுதி மின்வாரிய செயற் பொறியாளரை (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
    • விவசாய மின் இணைப்பு பெற அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம்.

    திருப்பூர்:

    தட்கல் சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விவசாயிகள் அந்தந்தப் பகுதி மின்வாரியத்தை அணுகலாம் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    இது குறித்து மின் வாரியத்தினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஆணையின்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் ஏற்கனவே தட்கல் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.

    ×