உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கும்பகோணம் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

Published On 2022-03-02 08:13 GMT   |   Update On 2022-03-02 08:13 GMT
கும்பகோணம் மாநகராட்சியில் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
கும்பகோணம்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த பிப்.22 தேதி நடைபெற்றது.இதனையடுத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்பு விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகராட்சியாக இருந்தது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 19-ந் தேதி முதன் முறையாக கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 38 வார்டுகளை கைப்பற்றி தி.மு.க. வெற்றி வாகை சூடி உள்ளது. இதனால் முதல் மேயர் பதவி தி.மு.க.வுக்கு கிடைத்து உள்ளது.
கும்பகோணம் மாநகராட்சியில் தனித்து தேர்தல் களம் கண்ட அ.தி.மு.க. 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 

2 வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். பின்னர் மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதனால் கும்பகோணம் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. வெற்றிபெற்ற 48 மாநகராட்சி உறுப்பினர்களுக்கு கும்பகோணம் மாநகராட்சியின் ஆணையர் செந்தில்முருகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு 4-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News