உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் பீரோ, கதவு உடைக்கப்பட்டிருக்கும் காட்சி.

பள்ளி ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை,பணம் கொள்ளை

Published On 2022-01-28 10:15 GMT   |   Update On 2022-01-28 10:15 GMT
பாளையில் பள்ளி ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

பாளை, பரிசுத்த ஆவி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சண்முகசுந்தரி (வயது 44).

இவர் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இங்கு சண்முகசுந்தரி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் சண்முகசுந்தரி காலையில் பள்ளிக்கூடம் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவரது வீட்டிற்கு கீழ் வீட்டில் அவரது தங்கை குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று பிற்பகல் கீழ் வீட்டில் உள்ளவர்கள் மாடிக்கு சென்றபோது, மாடி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதைத்தொடர்ந்து உடனடியாக அவர்கள் சண்முகசுந்தரிக்கு தகவல் தெரிவித்தனர். சண்முகசுந்தரி வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கச் செயின், வளையல், மோதிரம், கம்மல் என 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

கொள்ளை போன தங்க நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ 6 லட்சம் ஆகும். இதுகுறித்து அவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்றனர்.

அங்கு அவர்கள் வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.


கொள்ளை நடந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும்.அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த இடமாகும். எனவே அந்த பகுதியை நன்றாக அறிந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த பகுதியில் பலரது வீடுகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் வைக்கப் பட்டுள்ளன. போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளையும் பார்த்து சம்பவ இடத்திற்கு சந்தேகப்படும்படியாக யார் யார் வந்து சென்றுள்ளார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News