உள்ளூர் செய்திகள்
மதுரை மருத்துவக்கல்லூரியில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.

மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-01-27 11:34 GMT   |   Update On 2022-01-27 11:34 GMT
மதுரை மாட்டத்தில் 115 இடங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
மதுரை

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் ‘கோவேக்சின்’, ‘கோவீசில்டு’ ஆகிய 2 தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது.

அவற்றை 2  தவணைகளில் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி மதுரை மாவட்டத்தில் இதுவரை 33 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி மதுரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 688 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 980 பேர் சுகாதார ஊழியர்கள், 9 ஆயிரத்து 203 பேர் முன்களப்பணியாளர்கள், 20 ஆயிரத்து 505 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் ஆவர்.

மதுரை மாவட்டத்தில் சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த 11ந் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று 115 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 115 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News