உள்ளூர் செய்திகள்
கோவையில் இன்று அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை கிழித்து அகற்றிய ஊழியர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- பணம் பட்டுவாடாவை தடுக்க கோவையில் 24 பறக்கும் படைகள்

Published On 2022-01-27 05:04 GMT   |   Update On 2022-01-27 05:04 GMT
கோவை மாநகர் முழுவதும் பாலங்கள், சுவர்கள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டு இருந்த கட்சி தலைவர்களின் சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றினர்.

கோவை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மேலும் 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளது. இவைகளில் மொத்தம் 831 பதவியிடங்கள் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கோவை மாநகராட்சியில் 1,216 வாக்கு சாவடிகளும், 7 நகராட்சிகளில் 230 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 725 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2,171 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளதால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் படம் அகற்றப்பட்டது. மேலும் அரசின் திட்டங்கள் சார்ந்த விளம்பரங்கள் மறைக்கப்பட்டது.

மேலும் கோவை மாநகர் முழுவதும் பாலங்கள், சுவர்கள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டு இருந்த கட்சி தலைவர்களின் சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றினர். மேலும் சுவர்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களுடன் எழுதப்பட்டு இருந்த ஓவியங்களையும் பெயிண்ட் மூலமாக அழித்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்வதை தடுக்கவும் மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பறக்கும் படையினர் ரோந்து சென்று பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கண்காணிப்பு வாகன சோதனை மேற்கொள்ளும் பணியை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News