உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பி.ஏ.பி., திட்ட பாசன சங்க தேர்தல் - பிப்ரவரி மாதத்திற்குள் நடத்த திட்டம்

Published On 2022-01-26 04:20 GMT   |   Update On 2022-01-26 04:20 GMT
வரும் பிப்ரவரி மாதம் பாசன சங்கங்களுக்கு தேர்தல் நடத்தும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை:

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் பி.ஏ.பி., கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாக குழு உறுப்பினர், தலைவர்கள், திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஓட்டு போட்டு தேர்வு செய்வர்.பாசன சபை தலைவர்கள், பகிர்மானக்குழு தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். 

அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும் மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பாசன சபை நிர்வாகிகள் தண்ணீர் வழங்குவது, விவசாயிகளுக்கு நீர் பிரித்து கொடுப்பது, வாய்க்கால் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவர். இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த2009ம் ஆண்டு நடத்தப்பட்டது. 

முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம், 6 மாதம் நீடிக்கப்பட்டது. பதவியில் இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2014 டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பின் 8 ஆண்டாக தேர்தல் நடத்துவது இழுபறியாக இருந்து வருகிறது. இரு ஆண்டுக்கு முன் தேர்தல் நடத்த திட்டமிட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் பாசன சங்கங்களுக்கு தேர்தல் நடத்தும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை, திருமூர்த்தி மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு கோட்டத்தில் 113 பாசன சங்கங்களில் 668 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகள் உள்ளன.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் வாரியாக நில உரிமையாளர் பட்டியலுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, பி.ஏ.பி., அலுவலகங்கள் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்குள் ஆட்சேபனைகள், சேர்த்தல், நீக்கல் விண்ணப்பங்கள் வழங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிப்ரவரி மாதத்திற்குள் பாசன சபைகளுக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாசன சபைகளுக்கான தேர்தல் நடத்தும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்றனர்.
Tags:    

Similar News