உள்ளூர் செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2022-01-23 14:52 GMT   |   Update On 2022-01-23 14:52 GMT
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி மக்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்தத் திட்டத்தை 29-05-2013 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தவர் ஜெயலலிதா. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட முழு காரணமானவர் ஜெயலலிதாவும், அ.தி.மு.க. ஆட்சியும்தான் என்பதை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த எதிர்ப்புக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News