உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

விசைத்தறியாளர்கள் கூலி பிரச்சினை - தமிழக அரசு தீர்வு காண வலியுறுத்தல்

Published On 2022-01-22 10:45 GMT   |   Update On 2022-01-22 10:45 GMT
திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் இயங்கி வருகிறது.
பல்லடம்:

பல்லடம் விசைத்தறியாளர்கள் கூலி பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என கட்சி சார்பற்ற விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:

திருப்பூர்,கோவை மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் இயங்கி வருகிறது. பெரும்பாலும் விவசாயிகள் தான் விசைத்தறி தொழிலையும் நடத்தி வருகின்றனர். 

விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும், வாழ்வாதாரம் பெறுகின்றனர். கூலி உயர்வு கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் நலிவடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடந்த 24.11.2021ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம், மற்ற ரகத்திற்கு 20 சதவீதம் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது டிசம்பர் 1  முதல் புதிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்தாமல் உள்ளனர் .

இதனால் விசைத்தறியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கியில் கடன் பெற்ற விசைத்தறியாளர்கள், கடன் நிலுவை கட்டமுடியாமல் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். 

5 லட்சம் தொழிலாளரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழக அரசு விசைத்தறியாளர் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு வழங்க முன்வர வேண்டும் .

நியாயமான கூலி உயர்வை பெற்றுக்கொடுத்து போராட்டத்துக்கு சுமூக தீர்வு கிடைக்க தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி, நகரத்தலைவர் மைனர் தங்கவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News