உள்ளூர் செய்திகள்
மாடுகள் பூட்டி ஏர்கலப்பை மூலம் உழவுப்பணியில் ஈடுபட்ட விவசாயி.

தளி பகுதியில் மாடுகள் பூட்டி ஏர்கலப்பை மூலம் உழவுப்பணி செய்யும் விவசாயிகள்

Published On 2022-01-21 05:00 GMT   |   Update On 2022-01-21 05:00 GMT
இயற்கை முறையில் கருவுற்ற நிலத்திற்கு செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மூலம் கருவூட்டப்பட்டது.
உடுமலை:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏர் கலப்பையும், கால்நடையும் உழவுத்தொழிலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், அங்கமாகவும் விளங்கியது. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சி என்ற விஞ்ஞானத்தால் விவசாயத்தில் எந்திரத்தின் ஈடுபாடு தொடங்கியது.

நாள் முழுக்க கலப்பை கொண்டு உழும் நிலத்தை 4 மணி நேரத்தில் எந்திரம் உழுது காட்டியது. அதுமட்டுமின்றி பார் ஓட்டுவது, வரப்பு கட்டுவது, நிலத்தை சமன்படுத்துவது என அனைத்து பணிகளையும் எந்திரம் கவனித்துக் கொண்டது. 

இதனால் ஏர்கலப்பையின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வந்தது. இயற்கை முறையில் கருவுற்ற நிலத்திற்கு செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மூலம் கருவூட்டப்பட்டது. 

இதனால் விவசாயத்தின் நண்பனான மண்புழு உள்ளிட்ட ஏராளமான நன்மை தரும் பூச்சிகள், புழுக்கள் படிப்படியாக மரணத்தை தழுவியது. உயிரினங்கள் இல்லாத மண்ணும் உயிர்ப்புத்தன்மையை இழந்து மலடாகிப்போனது.

அதில் விளைகின்ற பொருட்களும் உடலுக்கு மறைமுகமாக கேடு விளைவித்து வந்தது. நீண்ட நெடிய பயணத்திற்கு பின்பு அதை உணர்ந்த விவசாயிகள் பழையபடி இயற்கை விவசாயத்திற்கு மாறும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர். 

அதன் முதல் கட்டமாக உடுமலை தளி பகுதி வயல்களில் ஏர் கலப்பையை கொண்டு நிலத்தை உழுது பண்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து கால்நடை கழிவுகளை கொண்டு இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள்  விரட்டிகள் தயாரிப்பிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News