பரமத்திவேலூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
பதிவு: ஜனவரி 16, 2022 13:12 IST
.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே குன்னத்தூர் கொரங்காட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (27). விவசாயி. இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஒன்றரை வயதில் சுதர்சன் என்ற மகன் உள்ளான். சுப்ரமணியத்துக்கும் நந்தினிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நந்தினி விரக்தியில் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பயிர்களுக்கு போடும் குருணை மருந்தை தண்ணீரில் கரைத்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நந்தினிக்கும் சுப்பிரமணியத்திற்கும் திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆவதால் வரதட்சணைக் கொடுமையால் நந்தினி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. இளவரசி விசாரணை நடத்தினார்.