உள்ளூர் செய்திகள்
ஏரி தண்ணீரில் மூழ்கிய தார்சாலை

ஏரி தண்ணீரில் மூழ்கிய தார்சாலை-போக்குவரத்து துண்டிப்பு

Published On 2022-01-16 06:28 GMT   |   Update On 2022-01-16 06:28 GMT
ராசிபுரம் அருகே தட்டான்குட்டை ஏரி நிரம்பிய தண்ணீர் வடியாததால் தார்சாலை மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராசிபுரம்:

ராசிபுரத்தில் தட்டான் குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு ஆலத்தூர் ஏரி, பட்டணம் ஏரி, ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரிகளின் வழியாக நீர்வரத்து வருவது வழக்கம். தட்டான் குட்டை ஏரி நிரம்பி வழிந்தால் அணைப்பாளையம் ஏரிக்கு செல்லும்.

 நிரம்பி வழியும் தட்டான்குட்டை ஏரி தண்ணீர் ஏரியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள் பயனடையும். ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இந்த ஏரியின் வழியாக கரட்டுப்பட்டி, நேரு நகர் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம்.

 ஏரியின் தெற்குப் பகுதியில் கிழ மேற்காக சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சாலையின் வழியாக பொதுமக்கள் நடந்து சென்று வந்தனர். கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக ராசிபுரம் நகரிலிருந்து மழைநீர் மற்றும் கழிவு நீர் கலந்து ஏரி நிரம்பி வழிந்தது.

 கழிவு நீருடன் கலந்த ஏரி தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து மக்காச்சோளம் உள்பட விவசாய பயிர்கள் அழுகியும் கருகியும் சேதம் அடைந்தன. ஏரிக்குள் போடப்பட்டிருந்த தார்சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த சாலையின் வழியாக கடந்த 1 மாதமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை.

ஏரி தண்ணீர் இன்னமும் வடிய வில்லை. இதனால் ஏரிக்குள் போடப்பட்டிருந்த சாலையின் வழியாக கரட்டுப்பட்டி, நேருநகர் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் வேறு வழியில் செல்ல வேண்டியுள்ளது. 

வயல்களில் தேங்கிய கழிவு நீருடன் கலந்த தண்ணீரால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News