உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொண்டைக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

Published On 2022-01-12 06:08 GMT   |   Update On 2022-01-12 06:08 GMT
மானாவாரியாக கொண்டைக்கடலை, கொத்துமல்லி, நிலக்கடலை போன்றவை மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது.
உடுமலை:

உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நீண்டகால மத்திய கால, குறுகியகால பயிர்கள், தானியங்கள், கீரைவகைகள் உள்ளிட்டவற்றை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். 

அது தவிர மானாவாரியாக கொண்டைக்கடலை, கொத்துமல்லி, நிலக்கடலை போன்றவை மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் விவசாயத்தை ஆதாரமாக கொண்டு எண்ணற்ற கூலித்தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் தளி சுற்று வட்டார பகுதியில் கொண்டைக்கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வானம் பார்த்த பூமியாக இருந்த மானாவாரி நிலங்கள் தற்போது பசுமை போர்த்திய புல்வெளி போன்று முழு பரப்பளவு சாகுபடிக்கு ஏற்றதாக மாறியுள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: 

வடகிழக்கு பருவமழையால் தடைபட்டிருந்த சாகுபடி பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விதைக்கப்பட்ட கொண்டைக்கடலை ஆரோக்கியமான முறையில் முளைத்து வளர்ந்து வருகிறது. ஆனால் பனிப்பொழிவு மற்றும் நிலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் அதன் வளர்ச்சி தடைபடுகிறது. 

அதேபோன்று நிலத்தில் விதைக்கப்பட்ட கொத்துமல்லியும் முளைத்து உள்ளது. செடிகளை பராமரிப்பு செய்து பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். 

ஆனால் மிதமான முறையில் ஒரு மழையோ அல்லது பனிப்பொழிவு தீவிரம் அடைந்தால் மட்டுமே செடிகளும் ஆரோக்கியமாக வளரும் விளைச்சலையும் ஈட்டமுடியும். எனவே மழையை எதிர்பார்த்து காத்து உள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News