உள்ளூர் செய்திகள்
முதலமைச்சரின் தனிப்பிரிவு

முதலமைச்சரின் தனிப்பிரிவு- மனுக்களை நேரில் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தல்

Published On 2022-01-10 11:31 GMT   |   Update On 2022-01-10 12:16 GMT
முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து தபால்/இணையதளம்/ மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சரின் தனிப்பிரிவில்  தினமும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொது மக்கள் மனு அளிக்கின்றனர். அது  தவிர முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்தும் மனுக்களை அளிக்கின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல்  வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க  வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற  வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே  பொதுமக்கள் மனுக்களை நேரிடையாக அளிப்பதை தவிர்த்து தளர்வுகள்  அறிவிக்கும் வரை தலைமைச் செயலக வாயிலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள  பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மிகவும்  அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை  நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.  

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து  தபால்/இணையதளம்/ மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய  வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஆகையால் கொரோனா  பெருந்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில்,  முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை  அளிப்பதற்காக கூடுவதை தவிர்த்து, தபால்/இணையவழி சேவைகளை  பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News