உள்ளூர் செய்திகள்
விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

நெல்லையில் இரவு நேர ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

Published On 2022-01-07 11:03 GMT   |   Update On 2022-01-07 11:03 GMT
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் ஊரடங்கு விதிகளை மீறிய 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவியதன் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நெல்லையில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து போலீசார் இரவு முழுவதும் விடிய விடிய சோதனை நடத்தினார்கள். முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டார்கள்.

நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் சுரேஷ்குமார் மேற்பார்வையில் இரவு 10 மணி முதல் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக திறந்த ஒரு ஓட்டலில் இரவு 10 மணியை கடந்தும் கடை திறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் அங்கு பொதுமக்கள் கூட்டமாக உணவு வாங்கினார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெருமாள்புரத்தில் பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணியை சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

மேலப்பாளையத்தில் 10 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றிய ஒருவர் மீதும், பஜாரில் தனியாக நடந்து வந்த ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் மட்டும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இது தவிர பேட்டை, டவுன், வண்ணார்பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி. நகர் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள், முககவசம் அணியாமல் வந்தவர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
 
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் முககவசம் இல்லாமல் ரெயிலில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News