உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசி கோவில் கும்பாபிஷேகம் - திட்ட மதிப்பீடு தயாரிப்பு

Published On 2022-01-05 07:19 GMT   |   Update On 2022-01-05 07:19 GMT
மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால் கும்பாபிஷேகம் நடத்த ஐகோர்ட்டு நியமித்த மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி பெற வேண்டியிருந்தது.
அவிநாசி:

கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். 

சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற அவிநாசியில் உள்ள தேர் தமிழகத்தில் 3-வது பெரிய தேர்.சுவாமிக்கு 7 நிலையிலும், அம்மனுக்கு 5 நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த 1980ல், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

அதன்பின் 1991 மற்றும் 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்து ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.

எனவே விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது. திருப்பணிகள் துவங்காததால் கோவிலில் பல இடங்களில் கட்டுமான பணிகள் சேதமடைந்து வருகின்றன என்ற புகாரும் இருந்தது.

கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு செய்து திருப்பணி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்தனர்.

மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால் கும்பாபிஷேகம் நடத்த ஐகோர்ட்டு நியமித்த மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அக்குழு கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கூறுகையில்:

கோவில் குட முழுக்கு செய்ய திருப்பணி வல்லுனர் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. திருப்பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திட்ட அறிக்கை தயாரானவுடன் உபயதாரர்கள் அளவிலான ஆலோசனை நடத்தப்பட்டு திருப்பணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News