உள்ளூர் செய்திகள்
கைது

துடியலூர் அருகே நள்ளிரவு ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்கள் கைது

Published On 2022-01-03 07:09 GMT   |   Update On 2022-01-03 07:09 GMT
துடியலூர் அருகே நள்ளிரவு ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிப்பாளையம் பிரிவில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்துக்குள் நள்ளிரவு 2 மணியளவில் 2 வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இந்த தகவல் மும்பையில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு சென்றது.

உடனடியாக வங்கி அதிகாரிகள் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் திறந்து இருந்தது.

இதனையடுத்து மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் தள்ளாடியபடி ஏ.டி.எம். எந்திரத்தை திறக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடினர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்கு அருகிலேயே 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் அருகே போலீசார் சென்று பார்த்த போது அவர்கள் தான் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்பு (வயது 24), பிருந்தாவன் பாகரதி (26) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

இவர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தனர். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் அறைக்கு செல்லும் வழியில் ஏ.டி.எம். மையத்தை திறந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது.

விசாரணை முடிந்ததும் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News