உள்ளூர் செய்திகள்
தேவாலயங்கள்

ஆங்கில புத்தாண்டு பிறப்பு- தேவாலயம், கோவில்களில் விசேஷ வழிபாடு

Published On 2022-01-01 02:36 GMT   |   Update On 2022-01-01 02:36 GMT
ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்ததையொட்டி புதுவையில் உள்ள அனைத்து கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
புதுச்சேரி:

ஆங்கில புத்தாண்டு இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புதுவை தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, ஜென்மராக்கினி ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், வில்லியனுர் மாதா கோவில் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் தேவாலயங்கள், கடற்கரை பகுதியில் திரண்டு இருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்த இடங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இளைஞர்கள் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தபடி சென்றனர்.

புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4.30 மணி நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

இதைத்தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, அமெரிக்க டைமண்ட் பொறிக்கப்பட்ட வைர கிரீடம் சாத்தப் படுகிறது. கோவிலில் இன்று அர்ச்சனை கிடையாது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்களுக்கு இடைவிடாது இனிப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது.

காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், வில்லியனூர் திருகாமீசுவரர் கோவில், திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில், கற்பக விநாயகர் கோவில், காந்தி வீதி பொன்னுமாரியம்மன் கோவில், எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், வசந்த் நகர் வேலாயுத ஈஸ்வரர் கோவில், கணபதி நகர் ஷீரடி சாய் பாபா கோவில், பெரிய ஆண்டவர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News