உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க நடவடிக்கை

தடுப்பூசி போட்டவர்களுக்கே ரேஷன் பொருட்கள்- சுகாதாரத்துறை அதிரடி

Published On 2021-12-27 03:38 GMT   |   Update On 2021-12-27 03:38 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம்:

கொரோனா தொற்று மற்றும் அதனை தொடர்ந்து டெல்டா வைரஸ், அதன்பின்னர் ஒமைக்ரான், அதன் பின்னால் வருவ தாக கூறப்படும் டெல்மைக்ரான் போன்றவற்றால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் இந்த மாதிரி வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்தது என்று கருதி சுகாதாரத்துறை மூலம் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இன்னும் சிலர் தடுப்பூசி போடுவதில் மெத்தன போக்கோடு உள்ளனர்.

இவர்களுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதோடு இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தொற்றினை முழுமையாக தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதன்படி தற்போது தடுப்பூசி போட்டவர்களுக்கே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வழங்கப்படும் என்றும் அதிரடி நடவடிக்கையில் சுகாதாரத்துறை முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் ஒருகட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வைப்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக மக்கள் மனதில் அந்த எண்ணத்தை வரவழைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு தடுப்பூசி கட்டாயம் என்ற திட்டத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளோம்.

இதன்படி அதற்கான விண்ணப்பத்தில் ரேஷன்கடையின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் விவரம் அவர்களில் யார், யார் எந்ததெந்த தவணை தடுப்பூசி போட்டுள்ளனர் என்பதை சான்றிதழுடன் இணைத்தும், தவிர்க்க முடியாமல் போடவில்லை என்றால் என்ன காரணம் என்று எழுதி கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட ரேஷன்கடையில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

குடும்ப உறுப்பினர்களில் எத்தனை நபர் தடுப்பூசி போட்டுள்ளாரோ அந்த எண்ணிக்கைக்கு மட்டுமே பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. அதேபோன்று டாஸ்மாக் கடைகளிலும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்தவும் பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News