உள்ளூர் செய்திகள்
கொள்ளை

சேலத்தில் போலீஸ் நிலையம் அருகே 4 கடைகளில் கொள்ளை

Published On 2021-12-26 07:06 GMT   |   Update On 2021-12-26 07:06 GMT
சேலத்தில் போலீஸ் நிலையம் அருகே 4 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் சாரதா கல்லூரி சாலையில் சாந்தம் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள 3 துணிக்கடைகளில் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல பணிக்கு வந்தனர். அப்போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு ‌ஷட்டர் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு இப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஒவ்வொரு கடையிலும் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோல் அத்வைத ஆசிரம் ரோட்டில் வணிக வளாகத்தில் உள்ள பிரபல மெடிக்கல் செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் அருகிலுள்ள கேமிராக்களின் வயர்களை வெட்டி ‌ஷட்டரை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஒடி சென்று நின்றது. பின்னர் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பதிவான கைரேகையை பதிவு செய்தனர்.

கொள்ளை நடந்த இடத்திற்கு துணை கமி‌ஷனர் மாடசாமி, உதவி கமி‌ஷனர்கள் முருகேசன், நாகராஜ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 3 துணிக் கடைகளில் ரூ.1 லட்சமும், மெடிக்கல்லில் ரூ.24 ஆயிரமும் கொள்ளை போனது. மேலும் மெடிக்கலில் இருந்த ரூ.6 லட்சம் பணம் தப்பியது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகில் கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News