உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் - மானியம் கிடைப்பதில் தாமதத்தால் பயனாளிகள் கவலை

Published On 2021-12-26 04:55 GMT   |   Update On 2021-12-26 04:55 GMT
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து மற்றும் வேலையாட்கள் இன்றி கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.
திருப்பூர்:

நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டு கடனுக்கான வட்டி மானியத்தை வழங்கும் வகையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. 

கொரோனா தொற்று பாதிப்பை தொடர்ந்து  மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தை மார்ச் 2021 வரை நீடித்தது. இந்தநிலையில் வீடு கட்ட அரசு மானியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், புதிதாக வீடு கட்டியவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பயனாளிகள் சிலர் கூறியதாவது:

மத்திய அரசு வழங்கும் மானிய திட்டத்துடன் இணைத்து கடந்த ஆண்டு வீடு கட்ட  தொடங்கினோம். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து மற்றும் வேலையாட்கள் இன்றி கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. 

இதற்கிடையே கட்டுமான பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்தன. மீண்டும் கட்டுமான பணிகள் நடந்து வரும் சூழலில் அரசு மானியம் இன்னும் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட வங்கிகளில் கேட்டால் மானியம் இன்னும் வரவில்லை என்கின்றனர்.

அரசு மானியம் உடனுக்குடன் கிடைத்தால் பணச்சுமை குறைவதுடன் கடன் தவணையை எளிதில் திருப்பி செலுத்தவும் வாய்ப்பாக அமையும். எனவே நிலுவையில் உள்ள அரசு மானியத்தை உடனடியாக விடுவிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News