உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வங்கிகள் முன்பு நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

Published On 2021-12-25 10:17 GMT   |   Update On 2021-12-25 10:17 GMT
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 62). சொந்தமாக சாய ஆலை நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி பல்லடம் ரோடு பகுதியில் உள்ள வங்கியில் ரூ.8 லட்சம் எடுத்தார். 

பின்னர் அந்த பணத்தை வங்கி முன் நிறுத்தி இருந்த காரில் வைத்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். 

அவர்கள் வெங்கடாசலத்தின் மீது மிளகுபொடியை தூவி அவருடைய கவனத்தை திசை திருப்பினர். அப்போது அவர் காரில் வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் வெங்கடாசலம் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் பணத்தை பறித்துச் சென்றது மங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30), கனியாம்பூண்டி பகுதியை சேர்ந்த சக்திசங்கர் (23) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் கைது செய்தார். 

பின்னர் அவர்களிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மிளகுபொடி, ரூ.7 லட்சத்து 12 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் வங்கிகள் முன்பு நின்று அதிக பணம் எடுத்து வரும் நபர்கள், முதியவர்கள் ஆகியோரை நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

நல்லூரில் ஒருவர் மீது  மிளகாய்பொடியை தூவி ரூ.5 லட்சத்தை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் பிடிக்க முயலவே அங்கிருந்து தப்பிசென்றனர். வீரபாண்டி பகுதியில் ஒருவரிடம் கைவரிசை காட்டியுள்ளனர். 

அங்கு 2வதாக கைவரிசை காட்டிய போது தற்போது சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இது போன்று வேறு யாரிடமாவது வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News