உள்ளூர் செய்திகள்
மரணம்

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது நர்சு மரணம்- ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2021-12-23 08:02 GMT   |   Update On 2021-12-23 08:02 GMT
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது நர்சு உயிரிழந்தது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்கிறார்.
குழித்துறை:

குழித்துறையை அடுத்த கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார் (வயது 35).

இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தினிமோள் (28). இவர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ஸ்டாப் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 4 ½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த ஒரு மாதமாக குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரசவ வலி எடுத்ததால் அவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நேற்று காலை 11 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

குழித்துறை அரசு மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார். பின்னர் மீண்டும் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இவருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தக்கலை ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News