உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

காங்கயம் பகுதி குளம், குட்டைகளுக்கு பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து தண்ணீர் விட வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2021-12-19 05:14 GMT   |   Update On 2021-12-19 05:14 GMT
வழியெங்கிலும் உள்ள தடுப்பணை ஒரே வாரத்தில் நிரம்பும் வாய்ப்பும் ஏற்படும்.
திருப்பூர்:

இந்த ஆண்டு பலத்த மழை காரணமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன. சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி உள்ளிட்ட தொகுப்பு அணைகளில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ளது. வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் கோரிக்கையின் பேரில் வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. 

அதேபோல காங்கயம் பகுதி விவசாயிகளும் உப்புக்கரை நதியில் தண்ணீர் திறந்துவிட்டு குளங்கள், தடுப்பணைகளை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

போதிய மழையின்றி காங்கயம் வட்டாரத்திலுள்ள குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. பி.ஏ.பி., பாசன பகுதியில் தற்போது பலரும் சோளம் சாகுபடி செய்துள்ளனர். சோள அறுவடையை முடிக்காமல் முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்தாலும் விவசாயிகளுக்கு பயனில்லை.எனவே காங்கயம் பகுதிக்கு உப்புக்கரை நதியில் தண்ணீர் திறக்க வேண்டும்.

அலகுமலையில் உற்பத்தியாகும் உப்பு கரை நதி தொடங்கும் இடத்தில் இருந்து பல குளங்கள் வறண்டு கிடக்கின்றன. பிரதான வாய்க்காலில் இருந்து அலகுமலை அடிவாரத்தில் உள்ள குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். 

அதன்பின் ஆலாம்பாளையம் வரை ஆக்கிரமிப்பில் உள்ள நீர் வழித்தடத்தை மீட்டு எடுத்தால் தண்ணீர் தன்னிச்சையாகவே ஆலாம்பாளையம், உப்பு கரைப்பாளையம், படியூர், ஆனைகுழி மேடு, ராசாபாளையம், காரக்காட்டுப்புதூர், செல்லப்பம்பாளையம், காமாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குளங்கள் மற்றும் தடுப்பணைகளை நிரப்பி நொய்யலில் கலந்து விடும். இதனால் பாலைவனமாக காட்சி அளிக்கும் காங்கயம் பகுதியும் செழிக்கும். 

வழியெங்கிலும் உள்ள தடுப்பணை ஒரே வாரத்தில் நிரம்பும் வாய்ப்பும் ஏற்படும். 

முதல் மண்டல பாசனத்திற்கும் போதுமான தண்ணீர் உள்ளது. வீணாக கடலில் கலக்கும் உபரி நீரில் கால் சதவீத தண்ணீர் திறந்து விட்டாலே எங்கள் பிரச்சினை தீர்ந்து விடும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News