உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் முழு வெற்றி கிடைக்கும் - ராமதாஸ்

Published On 2021-12-17 00:07 GMT   |   Update On 2021-12-17 00:07 GMT
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நியாயங்களை துல்லியமாக எடுத்து வைப்போம் என்றும், வழக்கில் முழு வெற்றி கிடைக்கும் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் வன்னிய மக்களை சமூக, கல்வி நிலையில் உயர்த்த வேண்டும் என்பதற்காக வன்னிய மக்களை ஒன்று திரட்டி 42 ஆண்டுகளாக போராடி வருகிறேன். அந்த போராட்டத்தின் பயனாகத்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சியில் வன்னியர் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு வன்னியர் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து எனது சார்பிலும், பா.ம.க., தமிழ்நாடு அரசு சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், அதிலும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.



அதைக்கேட்ட நீதிபதி நாகேஸ்வரராவ், “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்களை ரத்துசெய்ய முடியாது. இனி நடைபெறும் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது” என்றும் தெளிவுபடுத்தினார்.

அதேநேரத்தில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்கப்படும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். அரசு தரப்பு வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்கள் செல்லும்; அவற்றை ரத்துசெய்ய முடியாது என்றும் ஆணையிட்டிருக்கிறது. இவை அனைத்தும் நமக்கு சாதகமான அம்சங்களாகும். நமது தரப்பு நியாயங்களை கோர்ட்டில் துல்லியமாக முன்வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தமிழ்நாடு அரசும் இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. அதனால் வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதில் நமக்கு விரைவில் முழு வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News