உள்ளூர் செய்திகள்
அமைச்சர் பெரியசாமி

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொட்டாஷ் உரம் அனுப்பி வைக்கப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2021-12-15 09:16 GMT   |   Update On 2021-12-15 12:15 GMT
மொசைக் நிறுவனத்தின் டிசம்பர் 2021 திங்கள் ஒதுக்கீடான 3000 மெ.டன் பொட்டாஷ் உரத்தில், 1,275 மெ.டன் உரம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து திருச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரெயில் மூலம் நகர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 4356 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாய பெருமக்களுக்கு யூரியா, டிஏப்பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

டிசம்பர் 2021 திங்கள் முழுவதற்குமான தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பொட்டாஷ் உரத் தேவை 14,900 மெ.டன் ஆகும். தற்போது, பொட்டாஷ் உரம் 4945 மெ.டன் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

ஐ.பி.எல். நிறுவன பொட்டாஷ் உரம், 36,500 மெ.டன் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் 8.12.2021 அன்று பெறப்பட்டுள்ளது.

தற்போது தேவைப்படும் 14,900 மெ.டன் ஐபிஎல் பொட்டாஷ் உரம் தூத்துக்குடி துறைமுகத்தில் சிப்பமிடப்பட்டு, ரெயில் மற்றும் லாரி மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகின்றது.

நாளது தேதி வரை 1,795 மெ.டன் ஐபிஎல் பொட்டாஷ் உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.

மொசைக் நிறுவனத்தின் டிசம்பர் 2021 திங்கள் ஒதுக்கீடான 3000 மெ.டன் பொட்டாஷ் உரத்தில், 1,275 மெ.டன் உரம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து திருச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரெயில் மூலம் நகர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வார இறுதிக்குள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட ஐ.பி.எல். பொட்டாஷ் உரம் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News