உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை - வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு

Published On 2021-12-09 07:32 GMT   |   Update On 2021-12-09 07:32 GMT
கோவைக்கு வெளிநாட்டில் இருந்து வரும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பட்டியல் மாவட்ட சுகாதாரத்துறையிடம் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவோர் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும். உடல் சோர்வு ஏற்பட்டால் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வகையில் கோவைக்கு வெளிநாட்டில் இருந்து வரும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பட்டியல் மாவட்ட சுகாதாரத்துறையிடம் வழங்கப்படுகிறது. அதிகாரிகள், திருப்பூர் வரும் பயணிகள் வெளிநாட்டில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்தனர், இங்குள்ள முகவரி என்ன, அவர் உடன் வசிப்பவர் குறித்த விபரம் சேகரிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:

கோவை மட்டுமின்றி திருச்சி, சென்னை விமான நிலையங்களில் திருப்பூர் முகவரியுடன் வந்திறங்கும் வெளிநாட்டினர் குறித்து தினமும் விவரம் சேகரிக்கப்படுகிறது. அவ்வகையில் கடந்த, 1-ந் தேதி முதல், 7-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்துள்ளனர்.

இவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.7 நாட்கள் அவர்களது உடல்நிலை கிராம சுகாதார செவிலியர், சுகாதார பணியாளர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இவர்களுக்கு 7 நாட்களுக்கு பின் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே பாதிப்பு இருந்தால் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News