உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை- கடிதம் உள்ளதா? என போலீசார் ஆய்வு

Update: 2021-12-03 08:30 GMT
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

சென்னை வேளச்சேரி புதிய தலைமைச் செயலக காலனியில் வசித்து வந்தவர் வெங்கடாசலம்.

60 வயதான இவர், 1983-ம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தேர்வானார். வனத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த பதவியில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக வெங்கடாசலம் சொத்துக்களை வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் வெங்கடாசலத்துக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ.10 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன.

லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் வேளச்சேரியில் உள்ள வீட்டில் நேற்று மாலை வெங்கடாசலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு வெங்கடாசலம் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது ஊரைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக அவரிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்கனவே வருத்தத்தில் இருந்த வெங்கடாசலத்திற்கு மேலும் மன உளைச்சல் ஏற்பட்டது.

இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்கொலைக்கான உரிய காரணம் இன்னும் தெரியவில்லை.

வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்ட அறையில் கடிதம் ஏதும் உள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடிதம் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அவரது செல்போனில் தற்கொலைக்கான காரணம் எதுவும் இருக்குமா? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.

வெங்கடாசலத்தின் மகன் டாக்டராக உள்ளார். தற்கொலை தொடர்பாக அவரிடமும், குடும்பத்தினரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News