செய்திகள்
மரணம்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் தவறி விழுந்து மரணம்

Published On 2021-11-30 11:01 GMT   |   Update On 2021-11-30 11:01 GMT
பள்ளி-கல்லூரி மாணவர்கள் போதுமான பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதும், விபத்துக்களில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது.
மதுரை:

மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மகன் சரவணகுமார் (வயது 18).

இவர் செக்கானூரணியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று சரவணகுமார் போக்குவரத்து நகரில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார்.

அவருடன் அவனியாபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் முகேஷ் கண்ணன் என்பவரும் பயணம் செய்தார்.  2 பேரும் படிக்கட்டில் தொங்கியபடி சென்றதாக கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை மெயின் ரோடு என்.எம்.ஆர். பாலம் பகுதியில் பஸ் சென்றபோது சரவண குமாரும், முகேஷ் கண்ணனும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சரவண குமார் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். முகேஷ் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் ராம் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்டக்டர் கருப்பண்ணகுமார், டிரைவர் சுந்தரபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

பள்ளி-கல்லூரி மாணவர்கள் போதுமான பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதும், விபத்துக்களில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. இதுதவிர அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களும் பஸ்களை நிறுத்தாமல் செல்வதால் ஓடிச்சென்று ஏறும்போது மாணவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க காவல்துறையும், போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுத்தால் உயிர் பலியை தவிர்க்கலாம்.
Tags:    

Similar News