செய்திகள்
பிளஸ்-2 மாணவி, மாணவனை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

மின்சார ரெயிலில் தொங்கியபடி சாகசம்: பிளஸ்-2 மாணவி, மாணவனை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2021-11-26 10:09 GMT   |   Update On 2021-11-26 10:09 GMT
மாணவர்களை கண்காணித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவள்ளூர்:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை ரெயில் நிவையத்தில் ஓடும் மின்சார ரெயிலில் பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவரும், மாணவன் ஒருவரும் தாவி வந்து ஏறுகின்றனர்.

பின்னர் அவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடியும் கால்களை பிளாட்பாரத்தில் உரசியபடியும் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். இதனை அவர்களுக்கு முன்பகுதியில் இருந்த ரெயில்பெட்டியில் பயணம் செய்த நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த விபரீத 'சாகசம்' பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மின்சார ரெயிலில் சாகச பயணம் செய்தது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவி மற்றும் பிளஸ்-1 மாணவர் என்பது தெரிந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாணவ-மாணவி இருவரையும் பெற்றோருடன் வருமாறு அழைத்து இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும் என்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

இதேபோல் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலும் கல்லூரி மாணவர்கள் சாகச பயணம் செய்து வருகிறார்கள். இதுபற்றி போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினருக்கு தெரிவித்து உள்ளனர். எனினும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் சாகச பயணம் தினந்தோறும் தொடர்கிறது.

மாணவர்களை கண்காணித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News