செய்திகள்
கோப்புபடம்

மழையால் முருங்கைக்காய்க்கு கூடுதல் விலை - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-11-17 07:25 GMT   |   Update On 2021-11-17 07:25 GMT
முருங்கையில் செடிமுருங்கை மற்றும் மரமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாகுபடி பணிகளுக்கு தேவையான நீர் வரத்தை திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் அளித்து வருகிறது. 

அவற்றை ஆதாரமாகக் கொண்டு தென்னை, வாழை, கரும்பு, மா, முருங்கை, காய்கறிகள், கீரைகள், தானியங்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தளிப்பகுதியில் விவசாயிகள் முருங்கை சாகுபடியில் உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

முருங்கையில் செடிமுருங்கை மற்றும் மரமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளது. வைகாசி பட்டம் முருங்கை சாகுபடிக்கு ஏற்றது. ஏப்ரல் மாதத்தில் விதைகளை நடவு செய்தால் நடவு செய்த நாளிலிருந்து 6-வது மாதம் அதாவது நவம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். 

முருங்கை செடிகளின் நுனிப்பகுதியை கிள்ளி விட்டால் கூடுதலாக கிளைகள் வளர்ந்து அதிக அளவு விளைச்சலை கொடுக்கும். இதனால் வருமானமும் கூடுதலாக கிடைக்கும். 

வடகிழக்கு பருவமழையால் முருங்கைக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் அடுத்த பட்டத்தில் முருங்கையை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News