செய்திகள்
கைது

மதுரையில் ஆயுதத்துடன் பதுங்கி இருந்த கொள்ளையன் கைது

Published On 2021-11-16 10:31 GMT   |   Update On 2021-11-16 10:31 GMT
பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் வழிப்பறி கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார்.
மதுரை:

மதுரை மாநகரில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்கதையாகி வருகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர வடக்கு துணை கமி‌ஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் சிவக்குமார் அறிவுரையின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மா திடல் பகுதியில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்ட தும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து நீண்ட அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அண்ணா நகர் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் யாகப்பா நகர், அப் பாஸ் தெருவை சேர்ந்த சபரி என்கிற சபரிராஜ் (வயது 31) என்பது தெரிய வந்தது. இவர் மீது அண்ணா நகர் மட்டுமின்றி மாட்டுத்தாவணி, கருப்பா யூரணி ஆகிய போலீஸ் நிலையங்களிலும் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சாலையில் வருவோரை அரிவாள் முனையில் மிரட்டி பணம் பறிப்பதற்காக சபரிராஜ், பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் பகுதியில் பதுங்கி இருந்து உள்ளார்.

பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் வழிப்பறி கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார்.

Tags:    

Similar News