செய்திகள்
வானிலை நிலவரம்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Published On 2021-11-13 09:42 GMT   |   Update On 2021-11-13 10:21 GMT
சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் கடந்த மாதம் 27-ந் தேதி உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவை கொடுத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 9-ந் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

நேற்று முன் தினம் இரவு அந்த காற்றழுத்த மண்டலம் சென்னை அருகே கரையை கடந்து வலு இழந்தது. அந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த புதன், வியாழன் கிழமைகளில் மிக பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னையில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. தற்போது தான் இயல்பு நிலை சென்னையில் திரும்ப ஆரம்பித்துள்ளது. என்றாலும் சுமார் 200 தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்று மக்களை தொடர்ந்து பாதிப்புகுள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. தாய்லாந்து வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முதல் தீவிரமடைந்து உள்ளது.

இது தென்மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மதியம் உருவானது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் இன்று இரவு முதல் நகரத்தொடங்கும். இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை இலாகா ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய காற்றழுத்தம் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காற்றழுத்தம் அடுத்தடுத்து வலுவடையும்.

15-ந் தேதி அந்த காற்றழுத்த மண்டலம் எந்த திசையில், எந்த வேகத்தில் நகரும் என்பது கண்காணிக்கப்படும். அதைப்பொறுத்துதான் தமிழ்நாட்டிற்கு மீண்டும் அதி கனமழை என்னும் ‘ரெட் அலர்ட்’ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது தெரிய வரும்.

காற்றழுத்த மண்டலம் என்னும் புதிய சின்னம் தீவிரமானால் தமிழகத்திற்கு மீண்டும் அதிக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சென்னையில் 5 மடங்கு மழை அதிகமாக பெய்துள்ளது.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த சீசனில் இயல்பை விட அதிக மழை பெய்து இருக்கிறது. புதிய புயல் சின்னம் உள் மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

அடுத்த வாரம் வரை குறைந்த அளவே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News