செய்திகள்
கைது

தேவர் ஜெயந்தி விழாவின் போது அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3 வாலிபர்கள் கைது

Published On 2021-11-01 11:09 GMT   |   Update On 2021-11-01 11:09 GMT
அரசு பஸ்சை தாக்கி டிரைவரை காயப்படுத்தி மட்டுமின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தல்லாகுளம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.
மதுரை:

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடந்தது.

அப்போது சில வாலிபர்கள் உற்சாக மிகுதியால் அத்துமீறி செயல்பட்டனர். அங்கு வந்த அரசு பஸ் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.

இதில் டிரைவர் செல்வம் காயமடைந்தார். மேலும் 15-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பஸ்களின் கூரை மீது ஏறி நின்று நடனம் ஆடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

இதையடுத்து துணை கமி‌ஷனர் தங்கதுரை தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அரசு பஸ் டிரைவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி, காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 3 வாலிபர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குவது கேமிராவில் பதிவாகி இருந்தது. இதேபோல அரசு பஸ் மீது ஏறி நின்று நடனம் ஆடும் வாலிபர்கள் பற்றிய வீடியோ காட்சிகளும் தெளிவாக இடம்பெற்று இருந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது மதுரை மதிச்சியம் புளியந்தோப்பை சேர்ந்த அழகுபாண்டி (23), பொன்னுபாண்டி (25), பரசுராம் பட்டி மணி என்கிற பாட்டில் மணி (18) ஆகியோர் என்பது தெரிந்தது.

அரசு பஸ்சை தாக்கி டிரைவரை காயப்படுத்தி மட்டுமின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தல்லாகுளம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்கண்ட 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரசு பஸ் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட 15 பேர் பற்றிய விவரம் தெரிந்தது. அவர்களில் பலர் திருப்பாலை, வாடிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள வாலிபர்களின் உருவங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு, இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்று தல்லாகுளம் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மதுரை மாநகரில் தேவர் ஜெயந்தி விழாவின் போது வாகனங்களை அதி வேகமாக ஓட்டியது, அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் 112 மோட்டார் சைக்கிள்கள், 13 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 79 வழக்குகளை பதிவு செய்த போலீசார், அதில் 23 பேரை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிகளை மீறியதாக, 150 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது அரசு வாகனங்களை சேதப்படுத்தியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அதில் தொடர்புடையவர்களை டிரோன் கேமிரா பதிவுகள், போலீஸ் வீடியோ ஒளிப்பதிவுகள் மற்றும் கண்காணிப்பு கேமிரா காட்சிப்பதிவுகள் ஆகியவற்றின் மூலம் அடையாளம் கண்டறிந்து வருகின்றனர். அவர்களை உடனடியாக கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News