செய்திகள்
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு- தமிழகத்தில் 2½ லட்சம் லாரிகள் ஓடவில்லை

Published On 2021-10-31 08:39 GMT   |   Update On 2021-10-31 08:39 GMT
லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நாமக்கல்:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல், டீசல் விலையை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் கூட எண்ணெய் நிறுவனங்கள் தவறாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.95.09-க்கு விற்பனையானது. பின்பு நாள்தோறும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த ஒரு மாதத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.7.80 உயர்ந்தது. இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.102 யை கடந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறிதளவு மட்டுமே விலை மாறுபடுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.89 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.106.66 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ.110.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக லாரிகளுக்கு லோடு கிடைப்பதும் குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 65 ஆயிரம் லாரிகள் உள்ளன. இதில் டீசல் விலை உயர்வு மற்றும் போதிய லோடு கிடைக்காத காரணத்தால் மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 15 ஆயிரம் லாரிகள் மட்டுமே ஓடுகின்றன. 2½ லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இது லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி அதை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை கடுமையாக பாதித்து உள்ளது. இதனிடையே தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி உரிமையாளர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர். ஆனால் லாரி வாடகை உயர்த்தப்படவில்லை.

தமிழகத்துக்குப் பருப்பு, வெங்காயம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இதர மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. எனவே லாரிகளின் சரக்குகள் வாடகைக் கட்டண உயர்வால், பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக உள்ளது. இதனால் லாரி தொழில் முடங்கும் அபாயம் உள்ளது. டீசல் விலை ஏற்றத்தால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர மறைமுகமாக அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற நாங்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

எங்கள் கோரிக்கையை தெரிவிக்கும் விதமாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முடிவின் படி லாரி உரிமையாளர் சங்கங்கள் மற்றும் அதனுடன் இணைந்த சங்கங்கள் சார்பாக தீபாவளிக்கு பின்னர் மத்திய அரசு அலுவலகம் அல்லது ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆர்ப்பாட்ட தேதி பின்பு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 7 கட்ட மெகா முகாமில் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி- அமைச்சர் தகவல்

Tags:    

Similar News