செய்திகள்
எம்ஆர் விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக போலீஸ் விசாரணை

Published On 2021-10-26 09:40 GMT   |   Update On 2021-10-26 10:25 GMT
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாகவும், வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடைபெற்றது.
சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் வரை சொத்து சேர்த்தது கண்டு பிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத ரூ.25 லட்சமும், தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இதன் அடிப்படையில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை அலுவலகத்தில் கடந்த செப். 30-ந்தேதி ஆஜராக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை ஏற்று நேற்று காலை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் நாளை மீண்டும் ஆஜராக வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.



இந்த நிலையில் இன்று 2-வது நாளாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாகவும், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை முடிவில் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்பாக மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடத்தி உள்ளோம். அதுபற்றிய விரிவான தகவல்களை கோர்ட்டில் தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.


Tags:    

Similar News