செய்திகள்
கோப்புபடம்

ஆடை உற்பத்தியாளர்கள் கட்டண நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் - ஜாப் ஒர்க் துறையினர் கோரிக்கை

Published On 2021-10-25 04:17 GMT   |   Update On 2021-10-25 04:17 GMT
தீபாவளி நெருங்குவதால் மூலப்பொருட்கள் கொள்முதல், தொழிலாளருக்கு போனஸ் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் உள்நாட்டு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் ஆர்டர் அடிப்படையில் ‘ஜாப் ஒர்க்‘ நிறுவனங்கள், துணி உற்பத்தி, சாயமிடுதல், ஆடை தயாரிப்பு, பிரிண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றன. 

இந்தநிலையில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ‘ஜாப்  ஒர்க்‘ நிறுவனங்களுக்கு உரிய கட்டண தொகையை உடனடியாக வழங்குவதில்லை. தயாரித்து அனுப்பும் ஆடைக்கான தொகையை வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகர் வழங்கிய பின்னர்தான் ‘ஜாப்ஒர்க்‘ நிறுவனங்களுக்கு கட்டண தொகை கிடைக்கிறது.

அவ்வகையில் 30 நாள், 60, 90 நாட்களுக்கு பின் ‘ஜாப் ஒர்க்‘ நிறுவனங்களுக்கு ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கட்டண தொகை கிடைப்பது வழக்கம். கொரோனாவுக்கு பின் ‘ஜாப்ஒர்க்‘ நிறுவனங்களுக்கு கட்டண தொகை வழங்க ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மேலும் காலதாமதம் செய்கின்றன.

தீபாவளி நெருங்குவதால் மூலப்பொருட்கள் கொள்முதல், தொழிலாளருக்கு போனஸ் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது. இதனால் நிதி தேவை அதிகரித்துள்ளதால் நிலுவையில் உள்ள கட்டண தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என ‘ஜாப் ஒர்க்‘ துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து ‘ஜாப் ஒர்க்‘ துறையினர் கூறுகையில்:

கொரோனாவின் இரண்டு அலைகளால் திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களைப்போல்  ‘ஜாப்ஒர்க்‘ நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. நடைமுறை மூலதனத்துக்கே சிக்கல் ஏற்படும் நிலையில் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது.

ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கட்டண தொகையை நிலுவை வைத்துள்ளன. 

இந்த இக்கட்டான சூழலில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்பராய்டரி என எல்லாவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கும் நிலுவை கட்டண தொகைகளை விரைந்து வழங்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News