செய்திகள்
வயலில் எந்திரம் மூலம் அறுவடை பணிகள் நடைபெற்றபோது எடுத்தபடம்.

கூத்தாநல்லூரில் குறுவை அறுவடை பணிகள் மீண்டும் பாதிப்பு

Published On 2021-10-21 09:37 GMT   |   Update On 2021-10-21 09:37 GMT
மழை குறுக்கிட்டதால் கூத்தாநல்லூரில் குறுவை அறுவடை பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர்:

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதை பயன்படுத்தி திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் குறுவை பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால், அறுவடை பணிகளை விவசாயிகளால் திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை.

வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. கடந்த சில நாட்களாக கூத்தாநல்லூர் பகுதியில் மழை பெய்யவில்லை. கடுமையான வெயில் அடித்தது. இதனை பயன்படுத்தி கொண்ட விவசாயிகள் வயல்களில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றி குறுவை அறுவடை பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக கூத்தாநல்லூர் பகுதி வயல்களில் எந்திரங்கள் மூலம் அறுவடை பணி இரவு, பகலாக நடைபெற்று வந்தது. நேற்று காலையிலும் அறுவடை பணிகள் நடந்தன. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. திடீரென மழை குறுக்கிட்டதன் காரணமாக அறுவடை பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
Tags:    

Similar News