செய்திகள்
ஜோதிமணி எம்.பி.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும் இல்லை: ஜோதிமணி எம்.பி.

Published On 2021-10-19 12:51 GMT   |   Update On 2021-10-19 12:51 GMT
அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம், வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதுகுறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டபோது பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் இந்தியில் பிரச்சனையை விளக்க முடியவில்லை. ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதனையடுத்து, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. இது இந்திய அளவில் பெரிய பிரச்சினையாக உருவானது. தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஜோதிமணி எம்.பி. டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும் இல்லை. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. #HindiIsNotNationalLanguage

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி உண்டு.  அதுவே அந்தந்த மாநிலத்தின் தொப்புள்கொடி. அடையாளம். நமது அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம். நமது பெருமைமிகு வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News