செய்திகள்
கோப்பு படம்

ஜோலார்பேட்டை அருகே மண் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2021-10-17 13:50 GMT   |   Update On 2021-10-17 13:50 GMT
ஜோலார்பேட்டை அருகே மண் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, கந்திலி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப் பகுதிகளிலும், ஏரி, நிலங்களிலும் செயற்கை மணல், மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் பகுதியில் கவுரியம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மாட்டு வண்டிகளில் 3 நபர்கள் நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

இதையறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு செல்லும்போது மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பியோடினர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ஜோலார்பேட்டை அருகே சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த உதயசூரியன் (வயது 54), சேகர் ( 55) மற்றும் சரவணன் ( 45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் மேகலா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News