செய்திகள்
விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

ஆழியார் அணையில் 90 நாள் தண்ணீர் கேட்டு விவசாயிகள் தற்கொலை மிரட்டல்

Published On 2021-10-15 08:16 GMT   |   Update On 2021-10-15 08:16 GMT
ஆழியார் அணையில் விவசாயிகள் தாங்கள் கோரிக்கை விடுத்திருந்த 90 நாட்களும் தண்ணீரை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி:

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை. ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 6400 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது.

ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இன்று ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

காலை 10 மணி அளவில் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக பொள்ளாச்சி சப்-கலெக்டர், பி.ஏ.பி. செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா உட்பட அதிகாரிகள் வந்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் தாங்கள் கோரிக்கை விடுத்திருந்த 90 நாட்களும் தண்ணீரை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

ஆனால் அதிகாரிகளோ 80 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. அணையும் நிரம்பி உள்ளது. ஆகவே எங்கள் கோரிக்கை படி 90 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். அப்படி திறக்காவிட்டால் அணை நீரில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தனர். அதிகாரிகள், விவசாயிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News