செய்திகள்
கோப்புபடம்

விஷம் வைத்து கொல்லப்படும் மயில்கள் - வயல்களில் வனத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

Published On 2021-10-12 06:06 GMT   |   Update On 2021-10-12 06:06 GMT
திருப்பூர் மாவட்டம் முழுவதும், ஆயிரக்கணக்கான மயில்கள் பரவலாக வசித்து வருகின்றன. தேசிய பறவையான இவை சமீப காலமாக விஷம் வைத்து கொல்லப்படுவது அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் புதூர் வேலங்காட்டு தோட்டத்தில் 4 பெண் மற்றும் 6 ஆண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இறந்த மயில்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த மயில்கள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.

கால்நடை மருத்துவர்கள் கூறுகையில்:

இறந்த மயில்களுக்கு, ஒன்றரை முதல் இரண்டு வயது இருக்கும். இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்தான் மயில்கள் விஷத்தை உண்டுள்ளன. விஷம் அருந்திய மயில்கள் இங்கு வந்து இறந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வறிக்கை வனத்துறைக்கு வழங்கப்படும். வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணை மேற்கொள்வர் என்றார்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும், ஆயிரக்கணக்கான மயில்கள் பரவலாக வசித்து வருகின்றன. தேசிய பறவையான இவை சமீப காலமாக விஷம் வைத்து கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதத்தில் மட்டும் 53 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. இருந்தும் இவற்றை காப்பதற்கான எந்த நடவடிக்கையையும் வனத்துறை இதுவரை மேற்கொள்ளவில்லை. 

இதுகுறித்து வன அலுவலர் திருநாவுக்கரசர் கூறுகையில்:

கடந்த காலங்களில் மயில்கள் இறந்த சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகின்றன. பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் வைக்கும் பூச்சி கொல்லி மருந்துகளால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றார்.

மேலும் மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதால் மயில்கள் வராமல் இருக்க விவசாயிகள் வயல்களில் விஷம் கலந்த தானியங்களை வைத்து விடுகின்றனர். அதனை உண்பதால் மயில்கள் பலியாகும் சம்பவங்கள் நிகழ்கிறது. எனவே இதனை தடுக்க அவ்வப்போது வனத்துறை அதிகாரிகள் வயல்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News