செய்திகள்
கோப்புபடம்

பாதிக்க இருந்த பயிர்களை காப்பாற்றிய மழை - திருப்பூர் மாவட்டத்தில் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

Published On 2021-10-08 06:12 GMT   |   Update On 2021-10-08 06:12 GMT
நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் வயல்களில் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வண்ணம் நீர் நிரப்பி தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதுடன் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தன. அந்த பயிர்கள் தண்ணீரின்றி பாதிக்கும் நிலை ஏற்பட்ட நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் அவை காப்பாற்றப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி பணிக்கு மழையானது கை கொடுத்துள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

அதன்படி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.  

இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்று வட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இதன்படி முதல் கட்டமாக கீழ்பவானி பாசன விவசாயிகள் ஐ.ஆர்.20, கோ.ஆர் 50, கோ.ஆர்.51,ஏ.டி.டி.38, சி.ஆர்.1009, டீலக்ஸ் பொன்னி உள்பட பல்வேறு ரக விதை நெல்களை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து தங்களது வயல்களில் நெல் நாற்றுக்களாக மாற்றும் பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.

இதன்படி இப்பகுதி விவசாயிகள் கடந்த 4 நாட்களாக நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடைபெறும் வேளாண் வயல்களில் ஒரு பகுதிகளில் சேற்று வயல் அமைத்து நீரை நிரப்பி அதில் விதை நெல் மணிகளை தூவிவிட்டு நெல் நாற்றுக்கள் உற்பத்தி பணிகளை தொடங்கி உள்ளனர்.

மேலும் நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் வயல்களில் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வண்ணம் நீர் நிரப்பி தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நெல் விதைகள் தூவி விட்ட சுமார் 16 நாட்களுக்கு பிறகு நெல் நாற்றுக்கள் பச்சை நிறத்தில் லேசாக முளைத்து மேலே எழும்பி விடும்.  

அதன்பின்பு இந்த நெல் நாற்றுகள் மேலும் 20 நாட்களுக்கு பச்சை, பசேலென்று நன்கு வளர்ந்த பிறகு விதை நெல் வயல்களில் இருந்து நெல் நாற்றுக்கள் வெளியே எடுக்கப்பட்டு சேற்று உழவு பணிகள் செய்யப்பட்டு நெல் நடவு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும்.

மேலும் இப்பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அவ்வப்போது பெய்த சாரல், மிதமான, பலத்த மழை நீரினை பயன்படுத்தியும், கீழ்பவானி பாசன கால்வாய் தண்ணீரை பயன்படுத்தியும் நஞ்சை சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக விதை நெல்கள் மூலம் நெல் நாற்றுக்கள் விடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு, மற்றும் காய்கறிகள் சாகுபடியில் தீவிரம் காட்டினார்கள். தற்போது இரண்டு சுற்று தண்ணீர் நிறைவடைந்து உள்ளது. 

ஆனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் இன்றி இருந்தது. இதனால் பி.ஏ.பி பாசனத்தில் மானாவாரியாக சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ஆனால் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு பாசனத்தை கொண்டுள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த வார இறுதியில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது தளி பகுதியில் மழை பெய்தது. இதனால் வாடிய நிலையில் இருந்த மக்காச்சோள பயிர்கள் பசுமைக்கு மாறி வருகிறது. விவசாயிகள் அதை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் தரிசு நிலங்களில் மானாவாரி பயிர்களான கொள்ளு, நரிப்பயறு, சோளம், மொச்சை, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பு செய்து உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றில் சோளம், நரிப்பயறு, கொள்ளு ஆகியவை அடுத்த போகம் விதைப்பு செய்ய விதைக்காக அறுவடை செய்தது போக, அப்படியே மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளுக்கு உணவாக விடப்படுகிறது. சோளத்தட்டு அறுவடை செய்து சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம். 

நரிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை மேய்ச்சல் நிலங்களில் முற்றிய பின்னர் ஆடு, மாடுகளை அதனுள் மேய விடுவது வழக்கம். கடந்த ஒருவார காலமாகவே விதைப்பு, உழவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் நகர் பகுதியில் உள்ள தானிய மண்டிகளில் விதை தானிய வியாபாரம் களை கட்டியுள்ளது.

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது “நடப்பாண்டு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. விதைப்பு செய்யப்பட்ட பின்னர் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சீரான இடைவெளியில் பருவ மழை பெய்யுமானால் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் பெற்று விடலாம். இந்த ஆண்டு நிச்சயம் போதிய மழை பெய்யும்” என்றனர்.
Tags:    

Similar News