செய்திகள்
விபத்து

புதுக்கடை அருகே மணல் லாரி மோதி ஆசிரியர் பலி

Published On 2021-09-29 10:50 GMT   |   Update On 2021-09-29 10:50 GMT
புதுக்கடை அருகே மணல் லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிள்ளியூர்:

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை நோக்கி மணல் லாரி ஒன்று இன்று சென்றது. தேங்காப்பட்டணம்- மார்த்தாண்டம் சாலையில் புதுக்கடை சந்திப்பு பகுதியில் அந்த லாரி வந்தது. அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்தார்.

அந்த மோட்டார்சைக்கிள் மீது மணல் லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் சிக்கியது. மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

இதனால் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். விபத்து நடந்ததை தொடர்ந்து மணல் லாரியை ஓட்டிவந்த டிரைவர், லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கோர விபத்து குறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அவர் விரிவிளை பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பதும், பி.எட். கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News