செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீருக்காக வீதியில் இறங்கி போராடும் பொதுமக்கள் - 3 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுமா?

Published On 2021-09-27 07:21 GMT   |   Update On 2021-09-27 07:21 GMT
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

பின்னலாடை நகரமான திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 20லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக திருப்பூருக்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். 

மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படாததால் திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு என்பது தீர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பெண்கள் காலி குடங்களுடன் வீதிக்கு வந்து போராடும் சம்பவங்கள் கடந்த ஒரு வாரமாக  நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

சில இடங்களில் 10 , 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டும் விநியோகிக்கப்படுவதால் அந்த தண்ணீரை அடுத்து தண்ணீர் வரும் வரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. 

திருப்பூர் மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அவினாசி - அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட சில திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைந்த பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெண்கள் சிலர் கூறுகையில்:
  
வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 2 மணிநேரம் ,3 மணிநேரம் மட்டுமே விநியோகம் செய்கின்றனர். அதற்குள் தண்ணீர் நின்று விடுகிறது. அந்த தண்ணீர் 3, 4 நாட்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கும். அதன்பிறகு குடிநீரை விலைக்கு வாங்கி  பயன்படுத்த வேண்டியது  உள்ளது-.

மேலும் தண்ணீர் எப்போது விடுவார்கள் என்பது தெரியாமல் உள்ளது. திடீரென்று தண்ணீர் திறந்து விடுகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளில் தண்ணீர் திறக்கின்றனர். இதனால் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே குறிப்பிட்ட நாளில் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தெருக்களிலும் ஆழ்குழாய் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்றனர்.  

இதனிடையே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மாநில அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சுப்பராயன் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

மூன்று குடிநீர் திட்டம் வாயிலாக அதிக அளவு குடிநீர் கிடைக்கிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் ஏன் முறையாக வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுந்துள்ளது.

குடியிருப்புகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. 

இதனால் மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மாநகராட்சியின் மீது கோபமும், மாநில அரசு மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் உடனடியாக தலையிட்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News