செய்திகள்
கைது

மதுரையில் போலீசார் விடிய விடிய சோதனை- ஒரே நாளில் 60 ரவுடிகள் கைது

Published On 2021-09-24 10:01 GMT   |   Update On 2021-09-24 10:01 GMT
மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் விடிய விடிய நடந்த சோதனையில் 60-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:

தமிழகத்தில் ரவுடிகளை முழுவதுமாக ‘களை’ எடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டதன் பேரில் மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் விடிய விடிய நடந்த சோதனையில் 60-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியதாவது:-

மதுரை மாநகரில் 235 ரவுடிகளில் குற்ற வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. அதில் 25 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் விளைவாக மாநகரில் பலரை கைது செய்து உள்ளோம். அண்டை மாவட்டங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுதவிர ஆயிரத்து 170 பேரிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை சோதனை நடத்தப்பட்டது. இதில் 13 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

மதிச்சியம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் (வயது 18), வாசுதேவா (19), சுகுமார் (19), முகமது அலிப்கான் (19), ஸ்ரீதர் (19), சக்தி பாண்டி (20) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர தலைமறைவு குற்றவாளியாக தேடப்பட்டு வந்த மகாலிங்கம் மகன் காக்காவலிப்பு கார்த்திக் (21) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சைவதுரை (27) என்பவரும் பிடிபட்டார். அவரிடம் இருந்து 3அடி உயர வாள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் அதிரடி வேட்டை நடத்தப்பட்டதில் 126 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. இதில் 40 ரவுடிகள் பிடிபட்டனர். ஆயுதங்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய குற்றவாளிகள் 40 பேரிடம் நன்னடத்தை சான்றிதழ் பத்திரம் எழுதி வாங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News