செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே ரூ.15கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு

Published On 2021-09-22 09:10 GMT   |   Update On 2021-09-22 09:10 GMT
தமிழகம் முழுவதும் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவின்பேரில் மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 148.38 ஏக்கர் நிலம் உள்ளது. 

இதில் 1.67 ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அதனை மீட்க வேண்டுமென பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவின்பேரில் மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் வழிகாட்டுதலின்பேரில், உதவி ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி ஆகியோர் போலீசார், வருவாய்த் துறை அதிகாரிகளின் உதவியுடன் கோவிலுக்கு சொந்தமான 1.67 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை  மீட்டனர். 

அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 15 கோடியாகும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News