செய்திகள்
கொலை

மதுரையில் மகளின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற தந்தை

Published On 2021-09-18 07:12 GMT   |   Update On 2021-09-18 07:12 GMT
மதுரை சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:

மதுரை சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் ராமச்சந்திரன் (வயது 28). கூலித் தொழிலாளி.

இவர் நேற்று எம்.கே.புரம்- சுப்பிரமணியபுரம் சந்திப்பில் நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

படுகாயம் அடைந்த ராமச்சந்திரனை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ராமச்சந்திரன் 5 ஆண்டுகளுக்கு முன்பு சோலைஅழகுபுரத்தை சேர்ந்த வேறு ஜாதி பெண்ணான சிவஜோதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு வீரசெழியன் (5), துருவன் (1) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியை சேர்ந்தவர் பாலு. இவரது மகளை அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். 2 பேருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பெண் கணவருடன் கோபித்துக்கொண்டு தந்தை பாலு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராமச்சந்திரன், அந்தப் பெண்ணிடம் நெருங்கி பழகினார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் 2 பேரின் குடும்பத்திற்கும் தெரியவந்தது.

ஆத்திரமடைந்த பாலு குடும்பத்தினர் ராமச்சந்திரனிடம் மோதலில் ஈடுபட்டனர். தந்தை கணேசனும் மகனை கண்டித்துள்ளார். எனினும் ராமச்சந்திரன் கள்ளக்காதலி உடனான தொடர்பை கைவிட மறுத்து விட்டார்.

ராமச்சந்திரன் கடந்த 11-ந் தேதி பாலு வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மகளை தவிர யாரும் இல்லை. இருவரும் தனிமையில் மனம் திறந்து பேசினர்.

ராமச்சந்திரன் ரகசியமாக வீட்டுக்கு வந்திருக்கும் தகவல், பாலு குடும்பத்திற்கு தெரியவந்தது. அவர்கள் ஆவேசமாக உறவினர்களுடன் திரண்டு வந்தனர். பாலு வீட்டில் இருந்த ராமச்சந்திரனுடன் மோதல் ஏற்பட்டது.

அப்போது பாலு குடும்பத்தினர் ராமச்சந்திரனை கத்தியால் வெட்டினர். இதுகுறித்து ராமச்சந்திரன் போலீசில் புகார் கொடுக்கவில்லை.

இதனைக் கேள்விப்பட்ட ராமச்சந்திரனின் தந்தை கணேசன், மைத்துனர் சந்திரனுடன் பாலு வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். அப்போது “உன் மகனுக்கு என்னால்தான் சாவு” என்று பாலு ஆவேசமாக கூறினார்.

இதனால் பயந்துபோன கணேசன் பாலு குடும்பத்தால் ஆபத்து வரலாம் என்று கருதி மகன் ராமச்சந்திரனை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வந்தார்.

ராமச்சந்திரன் நேற்று இரவு வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

கணேசன், மைத்துனர் சந்திரனை அனுப்பி தேடி அழைத்து வரச் சொன்னார். அவரும் வீடு திரும்பவில்லை. பின்னர் கணேசன் மனைவியுடன் மகனைத் தேடி வந்தார்.

எம்.கே.புரம் - சுப்பிரமணியபுரம் சந்திப்பில் சந்திரனுடன் ராமச்சந்திரன் வருவது தெரியவந்தது.

பாலு, அவரது மகன் சேகர், மருமகன் தண்டபாணி ஆகிய 3 பேரும் அரிவாள் முனையில் 2 பேரையும் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த பாலு தலைமையிலான கும்பல் ராமச்சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி வீழ்த்தியது. படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். கணேசன் மகனை காப்பாற்ற முயன்றார். அவருக்கும் அடி உதை விழுந்தது. இதன் பின்னர் கொலை கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்  3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News