செய்திகள்
பெரியார் படத்துக்கு முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

Published On 2021-09-17 08:39 GMT   |   Update On 2021-09-17 09:39 GMT
தலைமைச்செயலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:

பெரியார் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17-ந் தேதி) சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறி இருந்தார். அரசு அலுவலகங்களில் இதை செயல்படுத்தும் விதமாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி இன்று சென்னை தலைமை செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



சமூக நீதி நாள் உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் வாசிக்க அதை அங்கிருந்த அனைவரும் வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழி வருமாறு:-

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்.

சுயமரியாதை ஆளுமைத்திறனும்- பகுத்தறிவுக்கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்.

சமூக நீதியையே அடித்தளமாகக்கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்.

இவ்வாறு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழி நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலங்களில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Tags:    

Similar News