செய்திகள்
கோப்புபடம்.

போலீசாரின் வலையில் சிக்கும் வங்கதேசத்தினர்-கொல்கத்தா கும்பலுக்கும் கடிவாளம் போடப்படுமா?

Published On 2021-09-07 09:05 GMT   |   Update On 2021-09-07 09:05 GMT
மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலி ஆவணங்களுடன் வங்கதேசம் உள்ளிட்டவெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:

பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் பதுங்கி இருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவது தொடர்கதையாகி வருகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன்தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் பூம்புகார் நகர் கிழக்கு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற 4 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.  

விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கதேச நாட்டின் அடையாள அட்டையை அவர்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவர்கள் வங்கதேசம் கல்சினி பகுதியை சேர்ந்த மெகபூல் சிக்தர் (வயது 35), டாக்காவை சேர்ந்த ஷோகில் அல்கர் (33), ஜேரூரை சேர்ந்த முகமது முன்னாகான் (32), சத்கிரா பகுதியை சேர்ந்த அல் அமீன் (23) என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் வெங்கமேடு, முத்தணம்பாளையம் பகுதியில்  தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேர் மீதும் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலி ஆவணங்களுடன் வங்கதேசம் உள்ளிட்டவெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பனியன் நிறுவனங்கள் மற்றும் வாடகை  வீட்டின் உரிமையாளர்கள் ஆகியோருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பனியன் நிறுவனத்தினர் பணிக்கு வரும் தொழிலாளர்களின் ஆவணங்களை சரிபார்த்து அதன்பின் பணியில் சேர்க்க வேண்டும்.போலிஆவணங்கள் கொடுத்தால் அதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

மேலும் திருப்பூருக்கு வரும் வங்கதேசத்தினர் மேற்கு வங்காளம் வழியாக ஊடுருவி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள கும்பல்தான்  வங்கதேசத்தினருக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து கொடுக்கின்றன. 

எனவே அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் வங்கதேசத்தினர் எங்காவது பதுங்கி யுள்ளனரா? என்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்னும் சிலர் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Tags:    

Similar News